கத்திக்குத்து: சமூக ஊடக பிரபல நரிக்குறவப் பெண் அஸ்வினி கைது

கத்திக்குத்து: சமூக ஊடக பிரபல நரிக்குறவப் பெண் அஸ்வினி கைது

1 mins read
d72f443c-e067-4f7e-9465-8c7ca57c91f0
கைதுசெய்யப்பட்ட அஸ்வினி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மாமல்லபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பில் வசித்து வருகிறார் அஸ்வினி.

இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிடச் சென்றார். அப்போது கோயில் நிர்வாகிகளால் தங்கள் சமூகத்தினர் அவமதிக்கப்பட்டதாக காணொளி மூலம் புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அந்தக் கோயிலுக்குச் சென்ற அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அந்தப் பெண்ணுடனும் அவரது உறவினர்களுடனும் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

அதேபோல் முதல் அமைச்சர் ஸ்டாலின், தீபாவளியின்போது நரிக்குறவர்கள் வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்குச் சென்றார். அங்குள்ள அஸ்வினியின் வீட்டுக்குச் சென்று அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்தபோது, நந்தினி என்ற பெண்ணுக்கும் அஸ்வினிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, சண்டையில் முடிந்தது.

அந்தச் சண்டையில், அஸ்வினி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கையில் கிழித்ததாக நந்தினி காவல்துறையில் புகார் அளித்தார். அதனையடுத்து அஸ்வினியை மாமல்லபுரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்