ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சியில் உள்ள வைரன்காடு கிராமத்தில் சிறுத்தை தலைகாட்டியதைக் கண்டு பயந்துபோன மக்கள் வனத்துறையிடம் புகார் அளித்தனர்.
சிறுத்தையைப் பிடிக்க அதிகாரிகள் வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் படச்சாதனங்களை வைத்துக் கண்காணித்தனர். சிறுத்தை ஒரே இடத்தில் இல்லாமல் வைரன்காடு பகுதியில் உள்ள காட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளைச் சிறுத்தை வேட்டையாட முயன்றது.
அப்போது சிறுத்தையிடம் இருந்து தப்பிய நான்கு ஆடுகள் அங்குள்ள செங்குத்தான பாறைக்குச் சென்று தஞ்சமடைந்தன. ஆனால் அவை கீழே இறங்க முடியாமல் எட்டி எட்டிப் பார்த்தபடி பாறையிலேயே நின்றன. இரவு நேரமானதால் வனத்துறை அதிகாரிகள், ஆடுகள் இருந்த பகுதிக்குச் செல்லாமல் ஆளில்லா வானூர்திப் படச் சாதனங்கள் மூலம் கண்காணித்தபோது சிறுத்தை பாறை மீது பதுங்கி இருப்பது தெரியவந்தது.
ஆடுகள் செங்குத்தான பாறைப் பகுதியில் இருந்ததால், சிறுத்தையால் ஆடுகளை வேட்டையாட முடியாமல், பாறையின் மேலே படுத்துக்கொண்டு ஆடுகளை கீழே விரட்டும் வகையில் அச்சுறுத்தி வந்துள்ளது. மறுநாள் காலை வனப்பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள், ஆடுகளைப் பாதுகாப்பாக கீழே விரட்டிவிட்டு, சிறுத்தை படுத்திருந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிறுத்தையின் முடி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுத்தை இருந்த பகுதியில் மரங்கள், பாறைகள் ஆகிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு படச்சாதனங்களைக் கட்டி வைத்துள்ளனர். தொடர்ந்து வனத்தைச் சுற்றிலும் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை இருப்பதை உறுதி செய்துள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

