தேனி: தேனி மாவட்டத்தில் ஏழு மாதங்களில் 121 குழந்தைத் திருமண முயற்சிகள் நடந்திருப்பதாக வெளியாகி உள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு 199 குழந்தை திருமணங்களை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அவற்றில் 185 திருமணங்கள் தடுக்கப்பட்டன. 14 திருமணங்கள் நடந்தேறின. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான ஏழு மாதங்களில் தேனி மாவட்டத்தில் 121 குழந்தைத் திருமண முயற்சிகள் நடந்துள்ளன. அவற்றில் 101 திருமணங்கள் தடுக்கப்பட்டாலும் 20 திருமணங்கள் நடந்து முடிந்தன.
தேனி மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான ஏழு மாதங்களில் பிறந்த 5,102 குழந்தைகளில் 473 குழந்தைகள் இரண்டரை கிலோவிற்குக் குறைவான எடையுடன் பிறந்ததாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்யும் சம்பவங்களாலும், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதியும் குழந்தைத் திருமணங்களை நடத்துவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

