சென்னை: சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இந்தத் தகவலை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் வெளியிட்டுள்ளார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுனில் பாலிவால் தேசியக் கொடியை ஏற்றினார்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் பேசிய அவர், 142 ஆண்டுகள் பழைமையான சென்னை துறைமுகம் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றி உள்ளது என்றார்.
“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இத்துறைமுகம் இருந்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த நிதி ஆண்டில் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
“தற்போது செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவாக முடித்திட அனைத்து அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகின்றனர்.
“சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பாலத் திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் ரூ.1,400 கோடி மதிப்பீட்டிலான பன்னோக்கு சரக்கு முனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று அவர் கூறினார்.
“அடுத்த ஓராண்டுக்குமுன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்,” என்றும் திரு சுனில் பாலிவால் கூறினார்.


