ரூ.500 வாடகைக் குழந்தையுடன் யாசகம்; திருச்சியில் அம்பலம்

1 mins read
6e472f1c-08b0-4557-b40c-8a6a1f093d66
திருச்சி காவிரி ஆற்றின் அம்மா மண்டப வாசலில் சில பெண்கள் பிள்ளைகளுடன் யாசகம் கேட்டு அலைந்தனர். அவர்களிடம் இருந்த குழந்தைகள் பிச்சை எடுப்பவருக்குச் சொந்தமான குழந்தையா எனப் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: திருச்சி காவிரி ஆற்றின் அம்மா மண்டப வாசலில் சில பெண்கள் கையில் பிள்ளைகளுடன் யாசகம் கேட்டு அலைவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் வந்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குக் காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகளைக் கண்டதும் குழந்தைகளை வைத்து யாசகம்கேட்டு வந்த பெண்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர்.

அப்போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துவந்த எட்டுப் பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். அந்தக் குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு வாங்கிவரப்பட்ட குழந்தைகள் என விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட குழந்தைகளைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை சில பெண்கள் கைக்குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி பிச்சை எடுத்தனர். இது, பிச்சை எடுப்பவருக்கு சொந்தமான குழந்தையா எனப் பலருக்கும் சந்தேகம் எழுந்தது.

இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிச்சை எடுப்பதற்காக நாளுக்கு ரூ.500க்கு குழந்தைகள் வாடகைக்கு கிடைப்பதாகவும், அவ்வாறு கிடைக்கும் குழந்தைகளை வாடகைக்கு வாங்கிவந்து யாசகம் பெறுவதாகவும் தெரிவித்தனர்.

அத்தகைய குற்றச் செயலில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகரக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
குழந்தை