சென்னை: தமிழ் நாடுப் பொதுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், அண்மையில் தமிழ் நாடு போக்குவரத்து அமைச்சர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில், மேடைக்குச் சென்று அமைச்சரின் காலில் விழுந்து வணங்கி, தனது சொந்த ஊருக்கு பணிமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது தனது 6 வயது மகளையும் அங்கு கூட்டிக்கொண்டு வந்திருந்தார்.
ஓட்டுநர் கண்ணனின் மனைவி அண்மையில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து தனது ஆறு வயது மகளையும் வயதான பெற்றோரையும் அவரால் சரிவரக் கவனித்துக் கொள்ளமுடியவில்லை.
கோயம்புத்தூரில் பணிபுரிந்து வந்த அவர், தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்று தன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. எனவே, தேனிக்குப் பணிமாற்றம் கோரி தனது மேலதிகாரிகளிடம் விண்ணப்பித்தும் பயனில்லை.
எனவேதான் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரனின் காலில் விழுந்தாவது பணிமாற்றம் பெற்றுவிட வேண்டும் என்று அவர் அமைச்சரின் காலில் விழுந்து மன்றாடியதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் சிவசங்கரனின் காலில் விழுந்து மன்றாடும் அந்த பரிதாப காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்தச் சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓட்டுநர் கண்ணன் குறித்து விசாரித்து அவரை அவரது சொந்த ஊருக்கு பணிமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

