மதுரை: சீன நிறுவனங்களின் கடன் செயலிகள் காரணமாக பலர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் குறித்து ஒடிசா மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது சீன போலி நிறுவனம் ஒன்றில் இயக்குநராக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரைச் சேர்ந்த சித்ரவேல் இருந்தது தெரியவந்தது.
கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் புகைப்படங்கள், அவர்களுடைய உறவினர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சித்ரவேல்தான் மேற்பார்வையிட்டு வந்துள்ளார்.
புதன்கிழமை ஆவியூரில் பதுங்கியிருந்த சித்ரவேலை ஒடிசா காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான சித்ரவேல் எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக பெங்களூரு சென்றுள்ளார். அங்கேயே தங்கி பணியாற்றி வந்ததாகவும் தெரியவருகிறது.

