விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வின்போது தங்கத்தால் செய்யப்பட்ட தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை அங்கு 3,254 தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கடந்த பல நாள் களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கி முதல் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வரும் நிலையில், இதுவரை பதினாறு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து சங்கு வளையல்கள், புகை பிடிப்பான் கருவி, சுடுமண்ணாலான பானை, பாசி மணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் தங்கத்தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாற்பது விழுக்காடு அளவுக்கு தங்கம் கலக்கப்பட்ட இந்தத் தாலியைக் காண விருதுநகர் மக்கள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர்.
“அகழாய்வில் கிடைத்த தங்கக் தாலி மொத்தம் 56 மில்லி கிராம் எடை இருக்கும் எனக் கருதப்படுகிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் தங்கத் தாலிக்கு நிகராக சிறந்த வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது.
“இதன் மூலம் வெம்பக்கோட்டை பகுதியில் வாழ்ந்த முன்னோர்கள் தங்கத்தால் ஆன நேர்த்தியான ஆபரணங்களைப் பயன்படுத்தி உள்ளனர் என்பது உறுதியாகிறது,” என ஆய்வாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.

