சென்னை: தமிழகத்துக்குக் காவிரி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுக்க உள்ளது. இதற்கான மனு இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி தண்ணீரை நம்பி தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு திட்டமிட்டுள்ளனர் என்றும் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளின்படி தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு இதுவரை திறந்துவிடவில்லை என தமிழக அரசு சுட்டிக்காட்ட உள்ளது.
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் இருமுறை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையகூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது கர்நாடக அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரிய தீர்வு கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாத காலங்களில் நீர்ப் பங்கீடு குறித்து இரு தரப்பும் கலந்து பேசி தீர்வு காண்பது அவசியம் என்றார். தமிழகத்துக்கு தற்போது கூடுதல் நீரை திறந்துவிடுவது சாத்தியமல்ல என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
“கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய எல்லா அணைகளும் நிரம்பி வழிந்தன. இந்த ஆண்டு குறைந்த மழைபொழிவால் இன்னும் நிரம்பாமல் இருக்கின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த இக்கட்டான நிலையில் நீர் பங்கீடுசெய்வது சிரமமான ஒன்றாகும். தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்,” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார், ‘‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்,’‘ என உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தமிழகத்துக்கு நீதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

