சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தனது 90 வயது தாயாரைத் தவிக்கவிட்டுவிட்டு ஆடவர் ஒருவர் மாயமாகிவிட்டார். அவரைத் தேடி கண்டு பிடிக்க காவல்துறை வேட்டையைத் தொடங்கியது.
அந்த ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது. நடக்கக்கூட தெம்பு இல்லாத அந்தத் தாய், தனது மகனைப் பார்த்தால் வரச் சொல்லுங்கள் என்று ரயில் நிலையத்தில் அங்கும் இங்கும் அலைந்தபடி போவோர் வருவோரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதைப் பார்க்க பரிதாபமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த முதிய மாது கையில் மஞ்சள் பை ஒன்றை வைத்திருந்தார். தனது சொந்த ஊர் திருநெல்வேலி விளாத்திக்குளம் என்றும் தனது பெயர் முத்துகாமாட்சி என்றும் அவர் கூறினார்.
காமராஜ் என்ற தனது மகனுடன் காலை 6 மணிக்குத் தாம்பரத்திற்கு ரயிலில் வந்ததாகவும் ரயில் நிலையத்தில் கீழே இறங்கியதும், இங்கேயே இரு, இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்ற தன் மகன் போனவன் போனவன்தான் என்றும் அந்த மாது அழுதபடியே கூறினார்.
விவரங்களைக் கேட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த மாதின் பையில் இருந்த கைப்பேசியை ஆராய்ந்தனர். அதில் இருந்த ஓர் எண்ணுக்குத் தொடர்புகொண்டனர். ஆனால் பதில் இல்லை.
பெற்ற தாயை எங்கேயாவது கைவிட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்த காமராஜ், தனது தாயை தாம்பரம் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்று இருக்கிறார் என்று காவல்துறை நம்புகிறது.
ஆனாலும் ரயில்வே நிர்வாகம் அந்த மாதைக் கைவிடாமல் அவரை மகனிடம் ஒப்படைக்க முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதுவரை அந்த மாதுக்கு உதவவும் அது முன்வந்துள்ளது.

