சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அவர், நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது என்றார்.
சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னையைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் இந்தச் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. மறுபக்கம் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதையடுத்து அத்தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்து வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் நீட் தேர்வு தொடர்பான ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்தும் திமுக சார்பாக நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
“பிரதமர் மோடி அரசு இந்த எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு,” என்றார் அமைச்சர் துரைமுருகன்.
முன்னதாக திருமண நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“நீட் தேர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக கூட ஆதரித்தது. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர் அல்ல; அதிபர்தான். மசோதாவை வாங்கி அதிபருக்கு அனுப்பும் அஞ்சல் ஊழியர் போன்றவர்தான் ஆளுநர்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
நீட் தேர்வுக்கு எதிரான அறப்போராட்டம் தொடரும் என்றும் அத்தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராகும் கனவு பறிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.