சென்னை: தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மாவட்டங்களில் இருந்து கல், மண் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கேரளத்திற்கு கடத்தப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தல் அன்றாட நிகழ்வாகிவிட்டது என்றும் தமிழ்நாட்டின் இயற்கையையும் சூழலையும் சீர்குலைக்கும் இச்செயல்களை தடுக்க அரசின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாக அறிக்கை ஒன்றில் திரு. அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிகள், செயற்கை மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் வாகனங்கள் மூலம் கேரளத்திற்கு கடத்தப்படுகின்றன என்றும் சட்டவிரோதமாக வெட்டி இந்தக் கனிமவளக் கொள்ளையை அனுமதிக்க முடியாது என்றும் அன்புமணி கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டின் வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது ஒருபுறமிருக்க, கனிமவள கடத்தல்களால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் எல்லையில்லாதவை.
“நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கடத்திச் செல்லப்படும் கனிம வளங்கள் மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுபவை அல்ல. மாறாக பூமிக்கு அடியில் 100 மீட்டருக்கும் கூடுதலான ஆழத்தில் உள்ள பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து கனிம வளங்கள் எடுக்கப்படுகின்றன. இதனால் கட்டடங்கள் அதிர்வது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்,” என்று அன்புமணி சுட்டிக்காட்டி உள்ளார்.

