அகமதாபாத்: மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து தமிழகம், இலங்கை இடையேயான பயணிகள் படகுச் சேவை விரைவில் தொடங்கப்படும் என தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழக கடல் சார் வாரியத்துக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவை அனைத்துலக அளவில் இணைக்கும் வகையில் இலங்கைக்கு முதன்மையான படகுச் சேவை தொடங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வேலு, இரு நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத்தும் என்றார்.
“படகுச் சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது. ராமேசுவரம், தலைமன்னார் இடையே படகுச் சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“1980ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்தியா, இலங்கை இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்,” என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

