சென்னை: போரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்களுக்கு தண்ணீர் விநியோகச் சேவையைத் தொடங்கும்.
இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக. 21 தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் போரூரில் 4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்புள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
“சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி, இயக்கி மற்றும் திருப்பித் தரும் அடிப்படையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு அன்றைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான மு.க.ஸ்டாலினால் 25.02.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
“இந்நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பெற்று, அன்றைய முதல்வர் கருணாநிதியால் 31.07.2010 அன்று திறந்து வைக்கப்பட்டது.
“இந்நிலையத்திலிருந்து கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றார்கள்.
“இதைத் தொடர்ந்து, நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்டப் பணிகளை அன்றைய துணை முதல்வரான மு.க.ஸ்டாலினால் 23.02.2010 அன்று அடிக்கல் நாட்டி இப்போது விநியோகச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
“தற்போது சீரான முறையில் இயங்கிவரும் இந்நிலையத்தின் மூலம், தென்சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
“இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 20 விழுக்காட்டைப் பூர்த்தி செய்து வந்தன.
“இத்திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர மக்களுக்கும் சென்னையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 35 பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வழங்க முடியும். அதாவது இந்தத் திட்டத்தின் மூலம் 22 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். 42 மாதங்களில் இந்தத் திட்டத்தை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

