சென்னை: மின்கட்டண முறைகேடுகளைத் தடுக்க ‘ஸ்மார்ட் மீட்டர்’ எனும் திறனளவிகளைப் பொருத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
அதற்காக, 30 மில்லியன் (3 கோடி) திறனளவிகளை வாங்குவதற்குத் தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
வீடுகளில் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடுவதில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஆங்காங்கே புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, அதனைத் தடுக்க திறனளவிகளைப் பொருத்தும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு தீர்மானித்தது.
அதன்படி, வீடுகளில் திறனளவி பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் கையில் எடுத்துள்ளது.
திறனளவி திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் செயல்முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. திறனளவித் திட்டத்தை மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக, மேற்கு மாவட்டங்களில் பத்து மில்லியன் திறனளவிகளும் தென்மாவட்டங்களில் 8 மில்லியன் திறனளவிகளும் பொருத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
அதற்கான தேதி நீட்டிக்கப்பட்டும் பல்வேறு ஐயங்கள் எழுந்ததால் பின்னர் ஒப்பந்தப்புள்ளி கோரும் நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுபற்றிக் கருத்துரைத்த மின்வாரிய அதிகாரிகள், “திறனளவி ஒப்பந்தப்புள்ளி விளக்கக் கூட்டத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. அவை மொத்தம் 265 ஐயங்களை எழுப்பின.
தொடர்புடைய செய்திகள்
“அந்த ஐயங்களைப் போக்கும் வகையில், ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. நிறுவனங்கள் கேட்டுள்ள விளக்கம் அளிக்கப்படும்.
“அத்துடன், மூன்று கட்டங்களாக தொகுப்புகளாக இடம்பெறவிருந்த பணியை ஒரே கட்டமாக முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்,” என்று தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பல்வேறு திருத்தங்களுடன் கூடிய புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பைத் தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்மூலம் தேர்வு செய்யப்படும் நிறுவனம், பத்து ஆண்டுகளுக்குத் திறனளவி பொருத்தும் பணியையும் அவற்றின் பராமரிப்புப் பணியையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.


