கோயம்புத்தூர்: விநாயகர் சதுர்த்தி விழா இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
அப்போது பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். பொது இடங்களிலும் பெரிய வடிவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவர்.
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பிள்ளையார் சிலை தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
அங்கு சனீஸ்வரருடன் அமர்ந்திருக்கும் பிள்ளையார், விவசாய விநாயகர், கடல்கன்னி உருவத்தில் அருள்பாலிக்கும் பிள்ளையார், சிங்க வாகனங்களில் எழுந்தருளிய விநாயகர், முருகன் புல்லட் ஓட்ட பின்சீட்டில் பயணம் செய்யும் பிள்ளையார், ராஜகணபதி, கடல் நாகத்தில் வீற்றிருக்கும் விநாயகர், மயில் மீது அமர்ந்த பிள்ளையார், சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிக்கப்பட்டு வருகின்றன.
களிமண் மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தண்ணீரில் எளிதாகக் கரையும் கிழங்கு மாவு, காகிதக் கூழ் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்தச் சிலைகள் தயார் செய்யப்படுகின்றன.
சிறிய சிலைகள் ரூ.200 முதல் ரூ.2,000 வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் ரூ. 10,000 முதல் ரூ.30,000 வரையும் விற்கப்படுகின்றன.


