சென்னை: தமிழக காவல்துறை முன்னாள் தலைவர் டிஜிபி சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத் தலைவர் பதவிக்கு அரசு தேர்வு செய்துள்ளதாக ஊடகத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் இந்த நியமனத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான அரசுக்கோப்புகளை அவர் திருப்பி அனுப்பிவிட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள், மறைமுக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரமும் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் சிறப்பாகச் செயலாற்றிய அதிகாரிகளில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவும் ஒருவர். தற்போது இளையர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு அனுப்பிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையென்றும் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
குறிப்பாக நீட் விலக்கு மசோதா, இணைய சூதாட்டத் தடை மசோதா உட்பட தமிழக அரசு முன்வைத்துள்ள பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், தமிழக அரசுப் பணிக்கான ஊழியர்களைத் தேர்வு செய்யும் தேர்வாணையத்துக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனினும் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் இதனால் தலைவர் உள்ளிட்ட பத்து உறுப்பினர்களை நியமிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிப்பது தொடர்பாக ஆளுநர் சில விளக்கங்களைக் கேட்டு, சம்பந்தப்பட்ட கோப்புகளை அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.