நாகை: தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடுக்கடலில் கொடூரமாக தாக்குதல் நடத்தியதும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடிக் கருவிகள், மீன்களை கொள்ளையடித்துச் சென்றதும் தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் அண்மையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கரையில் இருந்து சுமார் 22 கடல் மைல் தூரத்தில் நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
மொத்தம் இரண்டு படகுகளில் ஏழு தமிழக மீனவர்கள் இருந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மூன்று நவீன படகுகளில் திடீரென அங்கு வந்து சேர்ந்தனர். ஒன்பது கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் ஏறி கத்தி, கம்பி, கட்டைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
மீனவர்களில் இருவர், கொள்ளையர்களைத் தடுக்க முற்பட்டபோது கத்தியால் வெட்டுப்பட்டனர். ஒருவருக்குத் தலையில் பெரிய வெட்டு விழுந்தது.
இதையடுத்து, 800 கிலோ எடையுள்ள மீன்பிடிவலை, இரண்டு கைப்பேசிகள், திசைகாட்டும் கருவி, மின்கலம் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களையும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துக்கொண்ட கடற்கொள்ளையர்கள், மீனவர்களை கடுமையாக மிரட்டி, விரட்டி அடித்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளனர். சில நாள்களுக்கு முன்பும் தமிழக மீனவர்கள் இதேபோல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி உள்ள ராமதாஸ், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான தமிழக மீனவர்கள் பத்துப் பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 6ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த பத்துப் பேரும் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து திரிகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இனி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து பத்துப் பேரையும் நீதிபதி விடுவித்தார்.

