ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்

1 mins read
2ab1fac5-4b63-4026-9d8b-36bc45428b41
ஸ்டெர்லைட் ஆலை நுழைவாயில். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க இயலாது எனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ள வாதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த ஆலையில் ஏற்கெனவே ஏறத்தாழ நாலாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆலையை திறக்க காலதாமதம் செய்தால் இழப்பு அதிகரிக்கும் என்றும் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆலை நிர்வாகமும் தமிழக அரசும் எழுத்துபூர்வ வாதங்களை அளித்துள்ளன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 22 ஆண்டுகளாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு ஆலை நிர்வாகம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

“எனவே ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்,” எனத் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், நீதித்துறைமீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்