புதிய அணி அறிமுகம்: விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு

புதிய அணி அறிமுகம்: விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு

2 mins read
056ee412-ebb9-4a70-a07f-63333341c5c6
சமூக ஊடகப் பிரசாரத்திற்காக தகவல் தொழில்நுட்ப அணியை விஜய் மக்கள் இயக்கம் ஏற்படுத்தி உள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: நடிகர் தமது விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தி வருவதன் அடுத்த கட்டமாக அரசியல் கட்சிகளில் இருப்பதுபோல் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கி உள்ளார்.

அந்த அணியின் அறிமுகக் கூட்டம் வருகிற சனிக்கிழமை நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இரு நாள்கள் நடந்தது. கூட்டத்தில், இயக்கத்திற்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ஏற்படும் சட்டரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் வழக்கறிஞர் அணி உருவாக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் புஸ்ஸி ஆனந்த் பேசியபோது, “விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை விஜய் ஆலோசனையின்படி செய்து வருகிறோம். இதில் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இதைத் தொடர்ந்து இயக்கத்தின் வழக்கறிஞர் அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்ததாக, மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும் இயக்கத்தினருக்கும் செயல்படுத்தும் நோக்கத்தில் தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கப்பட்டுள்ளது.

“இந்த அணியின் நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வருகிற 26ஆம் தேதி காலை 8.55 மணிக்கு பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சுமார் 1,200 பேர் கலந்துகொள்வார்கள்,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்