சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்ஐடி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிக்கையை தேசிய தேர்வு முகமை கடந்த 17ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.
“ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்ஐடிகள், ஜெய்ப்பூரில் உள்ள எம்என்ஐடி ஆகிய நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலர் பணி நியமனங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிக்கை அது.
“அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 20 விழுக்காடு மற்றும் 30 விழுக்காடு மதிப்பெண்கள் ஆங்கிலம், இந்தி மொழித் தேர்வுகளுக்கு தரப்பட்டுள்ளன. ஆங்கிலம், இந்தி என மதிப்பெண் விவரம் பிரித்துத் தரப்படவில்லை. இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இது, மேலும் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்புகளை அதிகரித்து இந்தி பேசாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். மேலும் இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்திற்கு எதிரானது,” என்று கூறியுள்ளார்.