தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகை பணம் திருடி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த 2 பெண்கள் கைது

2 mins read
b51a8aa0-f139-4f24-9733-eb4a44d4454b
இரண்டு பெண்களும் திருட்டு மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. அவர்களிடம் கோடிக்கணக்கான சொத்து மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அன்னபூரணி, 75, என்னும் பெண் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்காக மணச்சநல்லூரில் இருந்து பேருந்தில் சென்றார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரைப் பவுன் நகை திருடப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அன்னபூரணி தான் வந்த பேருந்தில் சந்தேகப்படும்படி இரு பெண்கள் நின்றதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து லால்குடி காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து கண்காணிப்பு, தேடுதல் பணிகளை முடுக்கிவிட்டனர்.

பின்னர் சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இரு பெண்களை தனிப்படையினர் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள், 43, சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரேகா என்கிற கல்பனா, 43, என்பது தெரியவந்தது.

பின்னர் காளியம்மாளின் கைப்பேசியைச் சோதனை செய்தபோது அவர்கள் எந்த ஓர் இடத்திலும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி அன்னபூரணியின் தங்கச் சங்கிலியைத் திருடியவர்கள் என்பதை உறுதிசெய்தனர்.

இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும், திருப்பதி, மும்பை, புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளிலும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அன்னபூரணியிடம் திருடிய ஒன்றரைப் பவுன் சங்கிலி, வேறு பெண்களிடம் திருடிய 58 பவுன் நகை, அரைக் கிலோ வெள்ளி, ரூ.26,000 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கைதான இருவரும் பல்வேறு இடங்களில் நகை பணம் திருடி ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து பத்திர ஆவணங்கள் 2 கைப்பேசிகள் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

இருவரையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்ற பின்னர் சிறையில் அதிகாரிகள் அடைத்தனர்.

வழக்கமாக திருடும் நகைகளை அந்தப் பெண்கள் உடனடியாக விற்று நிலங்களை வாங்கியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்தது. விசாரணைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்