ரூ.150 கோடியில் புதிய பன்னோக்கு மருத்துவமனை
வேலூர்: தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்புக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ரூ.150 கோடியில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏழு தளங்களுடன் இந்த மருத்துவமனை அமைய உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்லூரிக்குள் பட்டாசுகளை வெடித்து மோதல்: பத்து மாணவர்கள் கைது
சென்னை: கல்லூரி வளாகத்துக்குள் பட்டாசுகளைக் கொளுத்திப்போட்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பத்து மாணவர்கள் கைதாகினர். சென்னை, வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார்் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. அப்போது கல்லூரி வளாகத்துக்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாகத் தகவல் பரவியது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி வளாகத்துக்குள் வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டுகள் அல்ல என்பதும் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியவை பட்படாசுகள் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பத்து மாணவர்கள் கைதாகி உள்ளனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட மூவர் கைது
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை மாங்காடு காவல்துறை கைது செய்துள்ளது. சென்னையை அடுத்துள்ள மாங்காடு பகுதியில் கடந்த நாள்களில் மூன்று வழிப்பறி சம்பவங்கள் நிகந்தன. இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் கத்தியால் வெட்டி, பணத்தையும் கைப்பேசியையும் பறித்துச் சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவங்கள் தொடர்பாகப் புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, ஒரு சிறுவனும் இரு இளையர்களுமாகச் சேர்ந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து கைப்பேசி, ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
நான்காயிரம் உடல்களை சொந்தச் செலவில் நல்லடக்கம் செய்தவருக்குப் பாராட்டு
காஞ்சிபுரம்: ஓய்வுபெற்ற காவல்துறை தலைமைக் காவலரான சீனிவாசன் இதுவரை ஆதரவற்ற நான்காயிரம் பேரை சொந்த செலவில் நல்லடக்கம் செய்துள்ளார். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட டிஐஜி சீனிவாசனை நேரில் வரவழைத்து அவரது இச்சேவையைப் பாராட்டும் விதமாக சால்வை அணிவித்தார். சீனிவாசனுக்குத் தற்போது 75 வயதாகிறது. பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், காஞ்சீபுரம், அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆதரவற்றவர்கள், கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தோர் உடல்களை சொந்தச் செலவில் நல்லடக்கம் செய்து, ஈம சடங்குகளையும் செய்து வருகிறார்.

