சென்னை: ஓணம் பண்டிகை வரும் 29ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநில மக்கள், சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.
ரயில்கள், பேருந்துகளில் முன்பதிவுகள் முடிவுற்ற நிலையில் பெரும்பாலானோா் விமானப் பயணங்களை நாடுகின்றனர்.
இதனால், சென்னை விமான நிலையத்திலிருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
அதனால், விமானக் கட்டணங்களும் மூன்று மடங்கு உயா்ந்துள்ளது. சென்னை - திருவனந்தபுரம் வழக்கமான விமானக் கட்டணம் ரூ.3,225. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.19,089 வரை உயா்ந்துள்ளது.
சென்னை-கொச்சிக்கு வழக்கமான நாள்களில் ரூ.2,962 கட்டணமாக வசூலிக்கப்படும். அதன் தற்போதைய கட்டணம் ரூ.6,500 முதல் ரூ.10,243 வரை.
அதேபோல, சென்னை-கோழிக்கோட்டுக்கு வழக்கமான நாள்களில் ரூ.3,148 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் தற்போது ரூ.7,641 முதல் ரூ.20,400 வரை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இருப்பினும், ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஓணம் பண்டிகையை தங்களது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆா்வத்தில் ஏராளமானோா் விமானங்களில் பயணம் செய்து வருகின்றனா்.