சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டுக்கான பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இக்கல்லூரிகளில் மாணவர் எந்தவொரு படிப்பையும் தேர்வு செய்யவில்லை.
மேலும், 208 பொறியியல் கல்லூரிகளில் பத்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாலோசனை மூன்று கட்டங்களாக நடைபெறும். நடப்பாண்டில் இந்தக் கலந்தாலோசனை அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வரும்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 442 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பொறியியல் சார்ந்த பல்வேறு படிப்புகளுக்கு 1,45,071 இடங்கள் உள்ளன.
இம்முறை 440 பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டு சுற்று கலந்தாய்வின் முடிவில் 50,615 மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 41 கல்லூரிகளில் மட்டுமே பொறியியல் படிப்புக்கான ஆகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், நவீன கற்றல் மையங்கள், தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு போன்றவை இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே அந்தக் கல்லூரிகளில் இடம்பிடிப்பதற்குக் கடும் போட்டி நிலவுகிறது. எனினும் இவற்றில் இடம் கிடைக்காத பட்சத்தில் இரண்டாம் நிலையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேர்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
காலியிடங்களை நிரப்ப மீண்டும் துணை கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள புள்ளிவிவரங்கள் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

