சென்னை: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு திட்டங்களுக்கான சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நீர்நிலைகளுடன் கூடிய நிலங்களை தாரை வார்க்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
எனவே நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 17ஆம் நாள் முதல் புதிய சட்டம் செயல்பாட்டுக்கு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த சட்டம் தேவையற்றது. “தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை மொத்தம் 41,127 ஏரிகள் இருந்தன. அவற்றில் சுமார் 15 ஆயிரம் ஏரிகள் இப்போது என்ன ஆயின என்பதே தெரியவில்லை. இப்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளன.
“குறைந்தபட்சம் இந்த நீர்நிலைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என அன்புமணி ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை செயல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளன.
“இப்புதிய சட்டம் அரசு அறிவிக்கும் சிறப்புத் திட்டங்களுக்கு நூறு ஹெக்டேர் வரையுள்ள நிலங்களில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் உள்ளிட்டவற்றை தனியாரிடம் கொடுப்பதற்கு வழிவகுக்கிறது.
“நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ள நிலையில், அந்த சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி, விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்தும்போது நியாயமான இழப்பீட்டை பெறவே விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை தாரைவார்க்க மட்டுமே பயன்படும்,” என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

