தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானது: ஆய்வில் 97 விழுக்காட்டுப் பெண் பயணிகள் கருத்து

1 mins read
0b69ecd7-d8b8-4e88-a8dd-8f1609582abd
மெட்ரோ ரயில். - படம்: ஊடகம்

சென்னை: மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானது என 97 விழுக்காடு பெண் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களில் சுமார் 35 விழுக்காட்டினர், அதாவது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். அவர்களில் 62.68% பேர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

“மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பெண்களில் கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள்தான் அதிகம். மெட்ரோ ரயில், ரயில் நிலையம், பயணச்சீட்டு பெறும் இடம், எஸ்கலேட்டர் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்புக் கருவிகள் இருப்பதால், பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள முடிகிறது என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.

“கைப்பேசி, பணப்பை என ஏதாவது உடமைகள் தவறினாலும், தகவல் கொடுத்தால் விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர் என்பதையும் பெண்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்,” என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெளியே குறிப்பிட்ட இடத்துக்கு பாதுகாப்பாக செல்ல போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவது, ரயில் நிலையத்தின் உள்ளே கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தருவது உள்ளிட்ட சில கோரிக்கைகளையும் பெண்கள் வைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்