மதுரை: தமிழ்நாட்டின் மதுரை நகரில் சனிக்கிழமை அதிகாலை ரயிலில் தீப்பிடித்து 9 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி லக்னோவில் இருந்து புறப்பட்ட ஆன்மிகச் சுற்றுலா ரயில் பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு சென்ற பின்னர் கடைசியாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு மதுரை வந்தடைந்தது.
நின்றிருந்த ரயிலுக்குள் இருந்து ஒரு பயணப் பெட்டியில் பயணி ஒருவர் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி ஸ்டவ் அடுப்பைப் பற்ற வைத்தார். தேநீர் தயாரிக்க அவர் அவ்வாறு செய்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து தீ மளமளவென ரயில் பெட்டிக்குள் பரவியது.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலரும் முண்டியடித்துக் கொண்டு ரயிலை விட்டு வெளியேறினர். அதனால், தீ அணைக்கப்படாமல் மேலும் பரவியது.
அதன் விளைவாக, அந்த ரயில் பெட்டி தீயில் எரிந்து பலத்த சேதமுற்றது. அதிகாலை நேரத்தில் ரயில் பெட்டியில் உறங்கிக்கொண்டு இருந்த முதியோர் தப்பிக்க இயலாமல் தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது.
பின்னர், மதுரை நகர தீயணைப்புப் படையினரும் பொதுமக்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். அதிகாலை 5.15 மணிக்கு எரியத் தொடங்கிய தீயை அணைக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமானது. தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் ரயில் பெட்டிக்குள் எரிந்த நிலையில் 9 சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களில் ஐவர் ஆண்கள், மூவர் பெண்கள், ஒருவர் ஆணா, பெண்ணா என்று அடையாளம் காணப்படவில்லை.
காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆனது.
சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டரை ரயிலில் எடுத்துச் சென்றவர்களால் இவ்விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே நிர்வாகம் கூறியது. இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏற்கெனவே தெற்கு ரயில்வே சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா, இந்த தீ விபத்து சதி வேலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

