சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வந்தது.
சென்னையில், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், தி.நகர், அண்ணாசாலை, வடபழனி, எழும்பூர், சேப்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.
இதேபோல், பெரம்பூர், ஓட்டேரி, திரு வி.க.நகர், உள்ளிட்ட வடசென்னை பகுதிகள், அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர், உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடியவிடிய மழை பெய்தது.
இரவு முழுவதும் தொடர்ந்த மழை அதிகாலை கனமழையாகி கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

