திருவாரூர்: மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையின் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவை 1) பாரத் மாலா திட்டம், 2) துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், 3) சுங்கச்சாவடி கட்டணங்கள், 4) ஆயுஷ்மான் பாரத் திட்டம், 5) அயோத்யா மேம்பாட்டுத் திட்டம், 6) கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம், 7) எச்ஏஎல் விமான வடிவமைப்புத் திட்டம் ஆகியவை என அவர் பட்டியலிட்டுள்ளார்.
“இந்த ஏழு திட்டங்களிலும் பல கோடி ரூபாய், ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாகப்பட்டிணம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் இல்லத் திருமண விழா திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “இண்டியா கூட்டணியின் மூன்றவது கூட்டம் வரும் ஆக.31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் நடைபெற உள்ளது. அந்தக்கூட்டத்தில், முக்கிய அறிவிப்புகளை எல்லாம் அறிவிக்க உள்ளோம். நானும் அந்தக் கூட்டத்துக்குச் செல்லவிருக்கிறேன்,” என்றார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 99999 99999 என்ற போலி செல்போன் எண்ணில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டுப் பச்சையாக ஒரு மோசடியைச் செய்துள்ளதாகவும் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்ற நோயாளிகள் 88,760 பேர் இறந்துவிட்ட போதிலும் அவர்கள் இறந்தபிறகும் சிகிச்சையளிக்கப்பட்டதாக கூறி, 2 லட்சத்து 923 காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடினார்.
“கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஊழலை ஒழிக்கப் போவதாகப் பிரதமர் கூறி வருகிறார். ஊழலைப் பேசுவதற்கு பாஜகவுக்கு அருகதை இல்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இண்டியா கூட்டணி உருவாகி உள்ளது. கடந்த தேர்தலின் மூலம் தமிழகத்தைக் காப்பாற்றிவிட்டோம். அடுத்து வரும் தேர்தலில் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுகவைப் பழி வாங்குவதற்காக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை மூலம் மத்திய அரசு மிரட்டிப் பார்க்கிறது என்றும் முதல்வர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அவரது குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

