[ο]சோனியா: என் வழியில் சென்று கொண்டிருக்கிறேன்
திருமண வாழ்க்கை ஏன் முறிந்தது என்பதற்கான தனது முன்னாள் கணவரான இயக்குநர் செல்வராகவனுக்கும் தமக்கும் மட்டுமே தெரியும் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
தனது காதல் செத்துப்போய்விட்டதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். அவர் இனி என் கண்களுக்கு நண்பராக தெரிய மாட்டார். காதல் செத்துப்போன பிறகு நண்பராகப் பார்க்க முடியாது. வாழ்க்கையில் மறுபடியும் அவர் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை.
“செல்வராகவன் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர். ஆனால் சொந்த வாழ்க்கையில் அப்படி இல்லை. மிக அமைதியானவர். எப்போதும் கதை வசனம் எழுதிக்கொண்டு பரபரப்பாக இருப்பார்,” என்று சோனியா அகர்வால் மேலும் தெரிவித்துள்ளார்.
தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் சென்று கொண்டிருப்பதாகவும் அது தமக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
[ο]ஐந்து மொழிகளில் பேசிய ஷ்ருதி
‘சலார்’ படத்தின் மூலம் புதிய சாதனை படைக்க உள்ளார் ஷ்ருதி ஹாசன். இந்தப் படம் ஐந்து மொழிகளில் வெளியீடு காண உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து மொழிகளிலும் தனது கதாபாத்திரத்துக்கு சொந்தக் குரலில் வசனங்களைப் பேசி வருகிறார் ஷ்ருதி. ஏற்கெனவே மூன்று மொழிகளில் ‘டப்பிங்’ பேசி முடித்துவிட்டாராம்.
மீதமுள்ள இரண்டு மொழிகளுக்கான பின்னணிக் குரல் பதிவு விரைவில் நடக்க உள்ளது.
“இயக்குநர் பிரசாந்த் நீல் அளித்த ஊக்கம்தான் என்னை வழி நடத்தியது. அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்,” என்கிறார் ஷ்ருதி.
“ஐந்து மொழிகளில் சொந்தக் குரலில் பேசி நடிப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இதன் மூலம் ஐந்து மொழி ரசிகர்களையும் கவர முடியும். இது ஷ்ருதியின் வளர்ச்சிக்கு உதவும்,” என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.
[ο]கிரண்: தவறான முடிவால் வாழ்க்கை நாசமானது
காதல் தோல்வி காரணமாகவே திரையுலகில் இருந்து தாம் சில காலம் விலகி இருந்ததாக நடிகை கிரண் கூறியுள்ளார்.
தாம் எடுத்த தவறான முடிவால் வாழ்க்கை நாசமாகிப்போனது என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ஒருவரை தீவிரமாகக் காதலித்தேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். ஆனால் அந்தக் காதல் தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்து போனேன்.
“இப்போது நடிக்க விரும்புகிறேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. புதிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்,” என்று கிரண் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தில் இவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விக்ரம் நடிக்கும் புதுப் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
விக்ரமுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘ஜெமினி’யில் கிரண்தான் கதாநாயகி. அச்சமயம் இளையர்களின் கனவுக்கன்னியாக இருந்தார் கிரண். தமிழில் கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார்.

