சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையின் தினத்தைக் கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை ரிப்பன் கட்டட வளாகத்தில் மாணவர்களுக்கான குதிரை வண்டி சவாரியை சென்னை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
குதிரை வண்டி சவாரியானது விக்டோரியா ஹால், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன், தெற்கு ரெயில்வே தலைமையகம், சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று மீண்டும் ரிப்பன் கட்டடத்திற்கு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 60க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலைமை செயல் அலுவலர் லட்சுமிமேனன், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

