தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊருக்குள் புகுந்து மாணவன், பாட்டிமீது கொடூரத் தாக்குதல்: நான்கு மாணவர்கள் கைது

2 mins read
0d71e4b7-d38a-4b51-a9cb-9912e034346f
தாக்கப்பட்ட மாணவன். - படம்: ஊடகம்

கரூர்: தமிழகத்தில் பட்டியலின மாணவர்கள் மீதான தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கரூரில் பட்டியலின மாணவரையும் அவரது பாட்டியையும் தாக்கிய நான்கு மாணவர்கள் கைதாகி உள்ளனர்.

கரூர் மாவட்டம் உப்பிடமங் கலம் அரசுப் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர் தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்று வருகிறார்.

அண்மையில் அந்த மாணவர் பள்ளி முடிந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் புலியூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு அது கைகலப்பாக மாறியது.

இதையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர் தங்கியுள்ள ஊருக்குள் புகுந்த சிலர் அவரது வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். மாணவர் மட்டுமல்லாமல் அவரது பாட்டியையும் அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியது.

படுகாயமடைந்த இருவரும் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இத்தாக்குதல் தொடர்பான காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பட்டியலின மாணவர், அவரது பாட்டி மீது தாக்குதல் நடத்திய 12ஆம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன் சாதிப் பாகுபாடு காரணமாக பள்ளியில் துன்புறுத்தப்பட்டான்.

பின்னர் சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் சின்னத்துரைக்கும் அவனது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

அந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி மறைவதற்குள் மீண்டும் அதேபோன்ற தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மாணவர்