காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மோசடி செய்த கர்ப்பிணிப் பெண், இளையர் கைது

1 mins read
93088f0d-bff7-43f6-8c1a-d859d91f5551
நவீன். - படம்: ஊடகம்

தி.மலை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்ட இளையரும் கர்ப்பிணிப் பெண்ணும் பிடிபட்டனர்.

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான இத்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

திருச்சியைச் சேர்ந்த நவீன் என்ற 22 வயது இளையர் நவீன ‘மைக்ரோபோன்’ கருவியைப் பயன்படுத்தி அத்தேர்வை எழுதி உள்ளார்.

இதையடுத்து, தேர்வு எழுதும் அறையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். மேலும், இம்மோசடியில் நவீனுக்கு அவரது 19 வயது தங்கை சித்ரலேகா உதவிகரமாக இருந்தது தெரியவந்தது. இருவரும் கைதாகினர்.

இதேபோல், திருவண்ணா மலையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் லாவண்யா என்ற கர்ப்பணிப் பெண் பங்கேற்றார். தேர்வு தொடங்கியதும் கழிப்பறைக்குச் சென்று வர அவர் அனுமதி கேட்க, கர்ப்பிணி என்பதால் அனுமதி அளிக்கப்பட்டது.

எனினும் 25 நிமிடங்கள் கடந்து விட்ட பிறகும் லாவண்யா தேர்வு எழுதும் அறைக்குத் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர், அவரது இருக்கைக்குச் சென்று பார்த்தபோது, கேள்வித்தாளும் விடைத்தாளும் அங்கு இல்லை எனத் தெரியவந்தது.

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த லாவண்யாவைச் சோதனையிட்டபோது, விடைத்தாளையும் கைப்பேசியையும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாவண்யாவின் கணவர் சென்னையில் காவல் உதவி ஆய்வாளராகவும் உறவினர் ஒருவர் திருவண்ணாமலையில் காவல் ஆய்வாளராகவும் பணியில் உள்ளனர்.

அவர்களுடைய உதவியுடன் லாவண்யா இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்