தூத்துக்குடி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிடத் தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு உரிமைதான் தேவைப்படுகிறது என்றும் சலுகைகள் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
“என்னை எப்போது நம்பப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும். ஏனென்றால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்.
“அப்போதுதான் சீமான் பாஜகவை உண்மையாகவே எதிர்க்கிறார் என்பது உங்களுக்குப் புரியும். பெரியார் சொன்னது போல் நான் பேசுவதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளவும். கெட்டது இருந்தால் விட்டு விடுங்கள்,” என்றார் சீமான்.