சிதம்பரத்தில் கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் பத்துப் பழங்காலச் சிலைகள் கண்டெடுப்பு

சிதம்பரத்தில் கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் பத்துப் பழங்காலச் சிலைகள் கண்டெடுப்பு

2 mins read
de658824-6cb8-49a2-abdd-f7b3ebf8e10b
கண்டெடுக்கப்பட்ட சிலைகள். - படம்: ஊடகம்

கடலூர்: வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட பத்துப் பழங்கால சாமி சிலைகள் குறித்து சிதம்பரம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதற்காக இச்சிலைகள் புதைத்து வைக்கப்பட்டனவா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூரைச் சேர்ந்த உத்திராபதி என்பவர் சொந்த வீடு கட்டி வருகிறார்.

அவருக்குச் சொந்தமான நிலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், சனிக்கிழமையன்று கட்டுமானத் தொழிலாளர்கள் கடப்பாறைகளைக் கொண்டு பெரிய பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஏதோ ஒரு பொருள் மீது கடப்பாறை மோதி, வித்தியாசமான சத்தம் எழுந்தது. இதுகுறித்து உத்திராபதிக்குத் தகவல் தெரிவித்த தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தி வீடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், உத்திராபதி குடும்பத்தார் பள்ளம் தோண்டும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டபோது ஆறு பழங்கால சாமி சிலைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இரவோடு இரவாக அவர்கள் அச்சிலைகளை எடுத்து வீட்டுக்குள் பத்திரப்படுத்தினர்.

எனினும், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வந்த தொழிலாளர்கள் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்குத் தகவலும் தெரிவித்தனர்.

காவல் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, உத்திராபதி குடும்பத்தார் ஆறு சிலைகளையும் ஒப்படைத்தனர். இதை யடுத்து, அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதில் மேலும் நான்கு பழங்கால சிலைகள் கிடைத்துள்ளன. நடராஜர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர், திரிபுரநாதர் உள்ளிட்ட அச்சிலைகள் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது.

மேலும் சில சிலைகள் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அந்த நிலப்பகுதியைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொல்லியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்