தமிழகத்தில் விலைவாசி, பணவீக்கம் குறைந்தது; தனிநபர் வருமானம் அதிகரித்தது

தமிழகத்தில் விலைவாசி, பணவீக்கம் குறைந்தது; தனிநபர் வருமானம் அதிகரித்தது

2 mins read
efa3509b-05e6-491d-9054-8f291be514bd
அமைச்சர் தங்கம் தென்னரசு. - படம்: ஊடகம்

சென்னை: பிற மாநிலங்களை விட தமிழகத்தில் விலைவாசி, பணவீக்கம் குறைந்துள்ளது என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலை உணவுத் திட்டம் நடைமுறையில் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் வருகை 30 விழுக்காடு அதிகரித்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளியலாக தமிழகம் திகழ்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்றார்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்றுக்குப் பின்னர் கடந்த 2021-22ஆம் ஆண்டில் 7.92 விழுக்காடாக இருந்தது என்றும் 2022- 23ஆம் ஆண்டில் இது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

“தமிழ்நாட்டில் கடந்த 2021-22ஆம் ஆண்டில் ரூ. 1.54 லட்சமாக இருந்த தனிநபர் ஆண்டு வருமானம் 2022-23ஆம் ஆண்டில் ரூ.1.66 லட்சமாக அதிகரித்துள்ளது.

தற்போது இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.98,374ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதைவிட அதிகமாக ரூ.1,66,727ஆக உயர்ந்துள்ளது,” என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழக அரசின் விலை இல்லா பயணச்சீட்டு திட்டத்தால் பெண்களுக்கு 900 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை மாதச் செலவு குறைந்துள்ளது என்றார் அவர்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் விலைவாசி குறைவாக உள்ளது. மேலும் பணவீக்க குறியீட்டு எண் மாநில அளவில் 2021ஆம் ஆண்டில் 7.92% ஆகவும் 2022-23ஆம் ஆண்டில் 5.97% ஆகவும் உள்ளது. இது ஒட்டுமொத்தமாக நாட்டில் நிலவிய பணவீக்க அளவைவிடக் குறைவு,” என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமான காலை உணவு திட்டம் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஓரிரு மாதங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தமிழகத்தில் தொழில்துறை மற்றும் சேவைத்துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்