நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு

நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு

1 mins read
27a8a0b7-6c26-4843-b19a-f300939dd244
சென்னை உயர்நீதி மன்றம் - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“இப்பணிக்காக மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக 3 கோடி ரூபாயும், பின்னர் தேவைக்கேற்பவும் நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

“தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே” என்று பாவேந்தர் காட்டிய வழியில் செம்மொழித் தமிழுக்குச் சட்டத்துறையிலும் உரிய இடத்தைப் பெற்றுத் தருவோம்,” என்று இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1968ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இருமொழிக் கொள்கை’ தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அன்றிலிருந்து தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருவதோடு, பல துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், காலத்துக்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழைச் சட்ட ஆட்சிமொழியாக்கத் தயாராகும் வகையில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம், சட்டத்துறையின் தமிழ்ப் பிரிவு மூலமாக பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில, ஒன்றியச் சட்டங்கள், அவசரச் சட்டங்கள், அவற்றின்கீழ் வகுக்கப்பட்ட விதிகள், அறிவிப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளைத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்