செந்தில் பாலாஜி பிணை கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு

செந்தில் பாலாஜி பிணை கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு

2 mins read
cf50e44d-cd61-45a9-b239-03a488bbafc6
அமைச்சர் செந்தில் பாலாஜி - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 25-ம் தேதி செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகையும், 3,000 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 28ஆம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்னிலைப் படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில், பிணை கோர முடியாது என்பதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகியது.

அவரது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு, செந்தில் பாலாஜி தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். இந்த முறையீட்டைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, அதனைக் கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார். இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரக்கூடும்.