தமிழகத்தில் 50 நகரங்களில் ஏற்றுமதி நிலையங்கள்

தமிழகத்தில் 50 நகரங்களில் ஏற்றுமதி நிலையங்கள்

1 mins read
fc51df50-9530-4785-9980-afa193c73558
-

காஞ்சிபுரம்: தமிழகத்தில் அஞ்சல் துறையின் வாயிலாக 50 நகரங்களில் ஏற்றுமதி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சென்னை மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடங்கியிருப்பது குறித்த விளக்கக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கி உரையாற்றினார்.

அப்போது அவர், தமிழகத்தில் 50 நகரங்களில் அஞ்சல்துறை ஏற்றுமதி மையங்களை தொடங்கியிருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே 219 நாடுகளுக்குப் பொருட்களை அஞ்சல் துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்று கூறினார்.

இருப்பிடத்துக்கே வந்து பார்சல்களை பெற்றுக் கொள்கிறோம். தேவைப்பட்டால் பேக்கிங் செய்துகொடுத்தும் பார்சல்களை ஏற்றுமதி செய்கிறோம். இந்தச் சேவைக்கு மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் குறைவான கட்டணமே பெறப்படுகிறது.

சிறு ஏற்றுமதியாளர்களும், தனி மனிதர்களும் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து விவரங்களை தெரிவிக்கவும், வழிகாட்டவும் அஞ்சல் துறை மூலம் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

எந்த ஒரு வணிகரும் அனைத்துலக வர்த்தகத்தின் சிக்கல்களை எளிதில் எதிர்கொள்ள வாய்ப்பளிக்கவும், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் ஏற்றுமதி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.