தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் சொத்துகளின் மதிப்பு 30% வரை அதிகரிப்பு

2 mins read
00b3051e-b083-46dd-8514-3a4b34da45e1
சென்னையில் புதிய கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. - படம்: ஊடகம்

சென்னை: அண்மைய ஆய்வின் மூலம் சென்னையில் சொத்து மதிப்பு 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது தெரியவந்திருக்கிறது. இதனால் வீடு, மனை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மெட்ரோ ரயில் சேவை, அதிக எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொத்து மதிப்பு அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013ஆம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் சதுரடி ரூ.11,600க்கு விற்பனையானது. இப்போது நில மதிப்பு 14 விழுக்காடு உயர்ந்து ரூ.13,200 ஆக உள்ளது. கிண்டியில் சதுரடி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.13,500 ஆக உயர்ந்துவிட்டது.

இதேபோன்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் நிலங்களின் விலை அதிகரிப்பதால் சொத்துகளின் மதிப்பும் ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பின்னர் விமான நிலையம் முதல் வடசென்னை வரை செல்வது எளிதாகி விட்டது.

இதே போல் கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் பகுதிக்குச் செல்வதற்கும் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது.

மெட்ரோ ரயில் இயக்கப்படும் பகுதிகளில் மக்கள் சொத்துகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுவதால் சொத்துகளின் மதிப்பு மளமளவென உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் மேலும் பல முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

எனவே அந்தப் பகுதிகளிலும் சொத்துகளின் விலை வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்கரை சாலை, போரூர் சாலை, வடபழனி, ஆற்காடு சாலை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம் சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மெட்ரோ ரயில் பாதை செல்லும் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களின் சொத்து மதிப்பு திடீரென 30 முதல் 40% வரை அதிகரித்து உள்ளது.

“மற்ற பகுதிகளைக் காட்டிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ள இடங்களில் அதிகபட்சமாக 50% வரை சொத்து மதிப்பை அதிகரித்து சொல்கின்றனர்.

“சென்னை, அண்ணாசாலையில் உள்ள சொத்துகளின் மதிப்பு ஆண்டுதோறும் 4.5% அதிகரித்து கொண்டே செல்கிறது.

“பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரை சாலையில் கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக 30% அளவுக்கு நிலத்தின் மதிப்பு அதிகரித்து உள்ளது,” என்கிறார் ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிவ குருநாதன்.

குறிப்புச் சொற்கள்