குனியமுத்தூர்: கோவை மலுமிச்சம்பட்டி போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான பத்திரிவைப்பு ஆலையில் வேலை பார்த்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வக்கீஸ்,38, என்பவர் அங்கு நிகழ்ந்த ஒரு விபத்தில் மாண்டார். அந்த ஆலைக்குச் செவ்வாய்க்கிழமை இரவு எண்ணெய் லாரி வந்தது.
அந்த லாரியை ஓட்டி வந்தவர் லாரியில் பத்திரிவைப்பு வேலை வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வக்கீஸ் இதர சில ஊழியர்களுடன் லாரியில் உள்ள பழுதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது வக்கீஸ் லாரிக்குள் இறங்கி, பத்திரி வைத்தார்.
அப்போது திடீரென லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. வெடித்த சில நிமிடங்களில் லாரியில் தீயும் பற்றி எரியத் தொடங்கியது. லாரி முழுவதும் பற்றி எரிந்த தீயில் வக்கீஸ் சிக்கிக்கொண்டார்.
அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து, சம்பவ இடத்திலேயே உடல் கருகியது. காவல்துறை அதிகாரிகள், வக்கீசின் கருகிய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த வேறு ஓர் ஊழியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.