தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகருக்கு இரண்டு சொகுசு கார்களில் 228 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த அரசியல்வாதிகள் உட்பட 16 பேர் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கினர்.
அவர்கள் வந்த இரண்டு கார்களை தூத்துக்குடியில் சோதனையிட்ட அதிகாரிகள் அந்த வாகனங்களில் போதைப்பொருள் இருந்ததைக் கண்டனர்.
பிடிபட்டவர்களில் ஒருவர் பாஜக கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான மணிகண்டன் என்பதும் மற்றொருவர் தூத்துக்குடி பாமக மாவட்ட இளைஞரணித் தலைவர் ராஜா என்பதும் தெரியவந்தது.
பிடிபட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள். அந்த 16 பேரும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.
அந்தப் போதைப்பொருள் கும்பல் ஆந்திராவில் இருந்து போதைப்பொருளைத் தூத்துக்குடிக்கு கடத்தி அங்கிருந்து அவற்றை இலங்கைக்கு கடத்தி வந்ததாக புலன்விசாரணையில் தெரியவந்து இருக்கிறது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தங்கள் கடத்தல் தொழிலுக்காக திவானியா, ஸ்ரீமதி ஆகிய இரண்டு பெண்களை அந்தக் கும்பல்காரர்கள் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
இந்த இரண்டு பெண்களும் பிடிபட்டு இருக்கிறார்கள். இவர்களில் திவானியா என்பவர் சட்ட கல்லூரியில் படித்து வருகிறார்.
கைதான 16 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய அதிகாரிகள் பிறகு அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பிடிபட்டு இருக்கும் கடத்தல் கும்பல் பேர்வழிகள் இந்தியாவுக்கு உள்ளே மாநிலத்திற்கு மாநிலம் போதைப்பொருளைக் கடத்தி வந்திருக்கிறார்கள்.
அதோடு மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் இவர்கள் போதைப்பொருளைக் கடத்தி இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
முழுமூச்சாக, முழுமையாகப் புலன்விசாரணை நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
பிடிபட்டவர்களில் ஒருவரான ஆரோன் என்பவர் சாத்தான்குளம் பகுதியில் 2,000 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு புகாரின் பேரில் ஏற்கெனவே தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரையில் கஞ்சா கடத்தல் தொடர்பாக 170 பேர் கைதாகி இருக்கிறார்கள் என்றும் 92 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை மொத்தம் 755 கிலோ கஞ்சா பிடிபட்டு இருக்கிறது. 38 வாகனங்கள் பறிமுதலாகி இருக்கின்றன. மொத்தம் 80 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. அந்தக் கணக்குகளில் ஏறக்குறைய ரூ.8 லட்சம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


