காலை உணவு திட்டம்: நேரில் வந்து ஆய்வு செய்த தெலுங்கானா அதிகாரிகள்

காலை உணவு திட்டம்: நேரில் வந்து ஆய்வு செய்த தெலுங்கானா அதிகாரிகள்

1 mins read
f4c942f7-855a-49bb-8447-27a1348de17f
தமிழக அதிகாரிகளுடன் கலந்துரையாடும் தெலுங்கானா அதிகாரிகள். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம் பல்வேறு மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திட்டம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள தெலுங்கானா மாநில அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வரின் செயலாளர், கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.

காலை உணவுத் திட்டத்துக்கான சென்னை ராயபுரத்தில் உள்ள உணவு தயாரிக்கும் கூடத்தையும் சில பள்ளிகள் இத்திட்டம் செயல்படுத்தப் படுவதையும் அவர்கள் நேரில் பார்வையிட்டனர். அக்குழுவுக்கு தமிழக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

உணவு தயாரிக்கப்படும் விதம், உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் முறை, அவை பள்ளிகளுக்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதைக் கேட்டறிந்த தெலுங்கானா, என்பதை கேட்டு தெரிந்து கொண்டதோடு, உணவை ருசி பார்த்தனர்.

தமிழகத்தில் 31,000 அரசுப் பள்ளிகளில் பயிலும் 170,000 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி தினமலர் நாளிதழில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவான, அருவருக்கத்தக்க தலைப்பிட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அந்த நாளிதழின் போக்கை தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்