தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்ந்தது

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்ந்தது

2 mins read
2bbdd3ca-543e-4a3a-9687-eb7df05b75cc
எல்லா வகையான வாகனங் களுக்கான கட்டணம் ரூ. 5 முதல் ரூ.65 வரை அதிகரித்து உள்ளது. இதனால் உணவுப் பொருள் விலை ஏறும் அபாயம் நிலவுகிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வாகனப் பயன்பாட்டுக் கட்டண அதிகரிப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் இந்த 28 தவிர, எஞ்சியவற்றுக்கான கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று எதிர்ப்புக்குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கான கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் சுங்கச் சாவடி கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எரிவாயு விலை உயர்வு காரணமாக உணவுப் பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை முதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை ரூ. 200 குறைக்கப்பட்டதால் மக்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்தனர்.

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை வெள்ளிக்கிழமை முதல் (செப் 1) ரூ.1,695க்கு விலை குறைவாக விற்கப்படுகிறது. இந்தக் கட்டணக் குறைப்பு உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அனைத்து வகையான வாகனங்களுக்கும் ரூ.5 முதல் ரூ.65 வரை கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்டண உயர்வால் லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வு காரணமாக உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது,” என்று அன்புமணி கூறியிருந்தார்.