ராமேசுவரம்: ராமேசுவரத்தில் 108 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலையை நிறுவுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்திய அளவில் இது 3வது பெரிய ஆஞ்சநேயர் சிலை.
நாட்டின் நான்கு திசைகளிலும் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் திட்டம் 2008ஆம் ஆண்டு ஹெச்சிநந்தா அறக்கட்டளையின் அறங்காவலரும் அனுமன் பக்தருமான நிகில் நந்தா, 49, என்பவரால் தொடங்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா புறநகர் பகுதியான ஜக்குமலையில் முதல் சிலை அமைக்கும் பணி கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஈராண்டு நடைபெற்றது. 2010ஆம் ஆண்டு அந்தச் சிலை திறக்கப்பட்டது.
இரண்டாவது சிலை ரூ.10 கோடி மதிப்பில் 2018ஆம் ஆண்டு குஜராத்தின் மோர்பி என்ற இடத்தில் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
பணிகள் நிறைவுபெற்று 17.04.2022 ஹனுமன் ஜெயந்தி அன்று காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
மூன்றாவது சிலை ராமேசுவரத்திலும் நான்காவது சிலை மேற்கு வங்காளத்திலும் அமைக்கப்படும் என்று அப்போது மோடி கூறியிருந்தார்.
அதற்கேற்ப, ஆஞ்சநேயர் சிலை எழுப்புவதற்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது.
16 அடி உயரத்தில் அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இலங்கையை ஆஞ்சநேயர் பார்ப்பதுபோல இந்த 108 அடி உயரச் சிலை அமைக்கப்பட உள்ளது. உப்புக் காற்றால் பாதிக்காத வண்ணம் ரசாயனம் கலந்து சிலை கட்டும் பணிகள் நடைபெற உள்ளன.

