US$1 டிரில்லியன் பொருளியல்: தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கையை உருவாக்க கூட்டமைப்பு முயற்சி

US$1 டிரில்லியன் பொருளியல்: தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கையை உருவாக்க கூட்டமைப்பு முயற்சி

2 mins read
31263b5c-d22a-49bb-b822-4d8ff10ac74f
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு மன்றத்தின் தலைவரான சங்கர் வானவராயர். - படம்: தி இந்து

சென்னை: இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு, பரந்த அளவிலான வெள்ளை அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகிறது.

சமூகப் பொருளியல் மேம்பாட்டில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு உயர்த்துவது அதன் இலக்கு.

தமிழ்நாடு வரும் 2030 ஆம் ஆண்டு வாக்கில் US$1 டிரில்லியன் பொருளியலைச் சாதிக்க உதவுவதும் அதன் நோக்கம்.

இவற்றைச் சாதித்துக் காட்டுவதற்காக அந்தக் கூட்டமைப்பு, ‘செயல் கொள்கை கலந்துரையாடல்’ என்ற ஓரு செயல்திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது.

அந்தச் செயல்திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். முதல் கட்டத்தின்படி 15 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 400 பேருக்குக் கேள்வித்தாட்கள் அனுப்பப்பட்டு கருத்துகள் திரட்டப்படும்.

தெரியவரும் கருத்துகள், யோசனைகள், தகவல்கள் அடிப்படையில் தொழில்துறை வல்லுநர்களுடன் வட்டமேசைக் கூட்டத்தை அந்தக் கூட்டமைப்பு நடத்தும்.

மூன்றாம் கட்டமாக வளர்ச்சித்துறைகள் யோசனைகளுடன் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு மன்றத்தின் தலைவரான சங்கர் வானவராயர் கூறியதாக தி இந்து செய்தித்தாள் தெரிவித்தது.

தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக வெள்ளை அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமான தொழில்துறை முதல் தற்காப்பு, வேளாண்மை, வாகனம், மின் வாகனம், சுகாதாரப் பராமரிப்பு, தோல், ஜவுளி, தளவாடப் போக்குவரத்து உட்பட பொருளியலின் பல துறைகளையும் உள்ளடக்கி அந்தக் கூட்டமைப்புச் செயல்பட்டு வருகிறது என்றும் படைப்பாற்றல், அறிவாற்றல் தொழில்துறையில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் திரு வானவராயர் கூறினார்.

தமிழ்நாட்டின் படைப்பாற்றல், அறிவாற்றல் தொழில்துறையின் மதிப்பு ரூ.200 பில்லியன் (US$2.6 பில்லியன்) என்று மதிப்பிடப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்