கோவை: கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.
கைதானவரின் பெயர் அசாருதீன் என்றும் இவருக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவிலின் முன்பு சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
காரில் இருந்த எரிவாயு உருளை வெடித்ததை அடுத்து, இந்த விபத்து ஏற்பட்டது என்றும் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்றும் காவல்துறை தெரிவித்தது.
எனினும், பின்னர் நடைபெற்ற தீவிர விசாரணையின்போது கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் காரில் வைக்கப்பட்டுள்ள எரிவாயு உருளை மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதன்படி, முதற்கட்டமாக குண்டு வெடிப்பை நிகழ்த்த ஜமேஷா முபின் சென்று கொண்டிருந்தபோது வழியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் அதனால் உடனடியாக காரில் இருந்த எரிவாயு உருளையை அவர் வெடிக்கச் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்தச் சதித்திட்டம் தொடர்பாக ஆறு பேரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், மேலும் ஐந்து பேருக்கு சதித்திட்டத்தில் தொடர்பு உள்ளதாகத் தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, கைதானோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது. அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் கோவையைச் சேர்ந்த முகமது இட்ரிஸ் என்பவர் கைதானார். அவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 13ஆவது குற்றவாளியாக அசாருதீன் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் தேவாலயங்கள், பிற இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு அசாருதீன் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சிறையில் இருந்த அசாருதீனை, கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் பலியான ஜமேஷா முபீன் சந்தித்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் அவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.