ஓ.பன்னீர்செல்வம், ரஜினி திடீர் சந்திப்பு; அரசியல் களத்தில் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம், ரஜினி திடீர் சந்திப்பு; அரசியல் களத்தில் பரபரப்பு

2 mins read
493a0dab-8ca9-48ca-b9ff-d1f14fdedd02
ஓ.பன்னீர்செல்வத்துடன் ரஜினி. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை அன்று நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசினார்.

எதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் தனித் தனியாகச் செயல்பட்டு வந்தனர்.

பின்னர், கட்சித் தலைமையைக் கைப்பற்றும் விதமாக இருதரப்பும் நீதிமன்றத்தை அணுகியது.

இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்குச் சாதகமாக அமைந்தது. அவர் அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதை அடுத்து, அதிமுக தலைமை அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

எனவே, தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகப் புரட்சிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்தப் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்தை திடீரெனச் சந்தித்துப் பேசியுள்ளார் ஓபிஎஸ்.

மரியாதை நிமித்தமானது என்று கூறப்படும் இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இருவரும் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது குறித்து அவர் ரஜினியிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்