தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சனாதனம் குறித்த பேச்சு, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார்

1 mins read
2e7b4b4f-cc30-4931-a4bd-caa8da932383
சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களோடு ஒப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வட மாநிலங்கள் வரை பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது. - படம்: இந்திய ஊடகம்

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு டெல்லி காவல் நிலையத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் புகாரளித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ‘சனாதன ஒழிப்பு’ மாநாடு நடத்தப்பட்டது.

இதில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ இந்த மாநாட்டிற்கு சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள். சனாதன எதிர்ப்பு மாநாடு என்று வைக்கவில்லை. சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கொவிட் போன்றவற்றை ஒழித்துள்ளோமோ அதே போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுகளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

“மக்களை சாதி வாரியாகப் பிரித்து தனித்து இருக்கவேண்டும் என சொன்னதுதான் சனாதனம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு மத்திய அமைச்சர்கள், இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பேச்சுக்கு சட்டப்படி உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் புகாரளித்துள்ளார்.

உதயநிதியின் பேச்சு சனாதன தர்மத்திற்கு எதிராக மக்களை தூண்டும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது. இந்து என்ற முறையில் இந்த பேச்சு எனது உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. மேலும் சமூகத்தில் இரு பிரிவினர் இடையே இவரின் பேச்சு பகைமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.